கணினி ஆசிரியர் தேர்வில் ஒரு சில இடங்களில் நடந்த குளறுபடிகளுக்குக் காரணம் என்ன என்பது குறித்து ஆசிரியர்தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் விளக்கமளித்துள்ளார்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணினி பாடப்பிரிவுக்கு 15 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக முதுநிலை ஆசிரியர்பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 30 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 25,500பேர் தேர்வில் பங்கேற்றனர். பல இடங்களில், தேர்வர்களுக்கு கணினியைஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், போதிய கணினிகள் இல்லாததால், சில இடங்களில் தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர். இதுதவிர சர்வரில் பிரச்னை, தேர்வு மைய முகவரியை சரியாக அச்சிடாதது என பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இந்த நிலையில், சில தேர்வு மையங்களில் தேர்வர்கள் கூட்டாக சேர்ந்து விவாதித்தும், செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு விடைகளைக் கேட்டு எழுதியாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட விடியோக்கள் தேர்வர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் தேர்வர்கள் காப்பியடிப்பதுபோன்றும், தேர்வு மையத்தில் கூச்சல் குழப்பமாக இருப்பது போன்றும் விடியோ கட்செவி அஞ்சலில் பரவியது. இதைக் கண்டித்து சில மாவட்டங்களில் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்வெழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வை முடிக்க முடியாதவர்களுக்கு அதை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
சர்ச்சை விடியோவுக்கு விளக்கம்:
இந்த நிலையில், கணினி ஆசிரியர் தேர்வு விவகாரம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் திங்கள்கிழமை விளக்கமளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அகில இந்திய அளவில் இணையவழியில் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்வு நாளன்று எதிர்பாராத விதமாக சரிசெய்ய இயலாத அளவில் கணினி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும் நிலையில் அந்தத் தேர்வு மையத்துக்கு மட்டும் தேர்வினை ரத்து செய்து மறு தேர்வு நடத்துவதற்குஅறிவிப்பு வெளியிடப்படுவது பொதுவாகவேவழக்கத்தில் உள்ளது. இதற்கு முன்னர் தேசிய அளவிலும் தமிழகத்திலும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டுள்ளன.
கணினி ஆசிரியர் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. சர்வர் பிரச்னை காரணமாக தேர்வு ரத்தான பின்புதிருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரி மையத்தில் விடியோ எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த பின்பு, தேர்வு மையத்திற்குள் செல்லிடப்பேசி அனுமதிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்படும் என்றார் அவர். 1,221 பேருக்கு ஜூன் 27-இல் மறுதேர்வுதொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட மூன்று மையங்களில் மட்டும் வரும் 27-ஆம் தேதி கணினி ஆசிரியர் தேர்வுக்கு மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் கூறியது: தேர்வு நடைபெற்ற 119 மையங்களில் திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி, கும்பகோணம் அன்னை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி கொங்குநாடு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 3 மையங்களில் மட்டுமே தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தேர்வு நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த மூன்று மையங்களில் தேர்வு எழுதிய1, 221 பேருக்கு மட்டும் வரும் 27-ஆம் தேதி வியாழக்கிழமை மறுதேர்வு நடைபெறும். தேர்வு மையம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட நுழைவுச்சீட்டு ஆகிய விவரங்கள் தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். இதையடுத்து கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி மையத்தில் 944 பேர், அன்னை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில்118 பேர், கொங்குநாடு பொறியியல் கல்லூரி மையத்தில் 159 பேர் என 1,221பேர் மீண்டும் தேர்வெழுதவுள்ளனர்.
No comments:
Post a Comment