
சிரியா அரசுக்கு எதிராக தொடர் தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்காவுக்கு, ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாஸ்கோ,
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டூமா நகரில் கடந்த 7-ந் தேதி நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க கூட்டுப்படைகள் 2 நாட்களுக்கு முன்பு அரசு படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தின. இதில் ராணுவத்தின் 3 ரசாயன ஆயுத நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
இதனால், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவும் அதன் நேச நாடான ஈரானும் கொதித்தெழுந்து உள்ளன. இது தொடர்பாக ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் ஹசன் ரஹானியை நேற்று டெலிபோனில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “அமெரிக்க கூட்டுப்படைகள் சிரியாவில் அரசுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக கூறியிருப்பது, ஐ.நா.வின் விதிமுறைகளை மீறிய செயலாகும். இதுபோன்ற நடவடிக்கைகள் சிரியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதை தடுப்பதுடன், சர்வதேச அளவிலும் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார். மேலும் சிரியா மீது தொடர் தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் புதின் குறிப்பிட்டார்.
புதின் கூறியதை ஹசன் ரஹானியும் ஏற்றுக்கொண்டதாக கிரம்ளின் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment