அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் முன் அனுமதி இல்லாமல் விடுப்பு எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்களின் வருகைப் பதிவை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ளது.
அதனால் பள்ளிக்கு வராமல் ஆசிரியர்கள் மட்டம் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பல ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், அல்லது கல்விஅலுவலர்களிடம் முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்து வருகின்றனர். இன்னும் சில ஆசிரியர்கள் விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு, அதை கணக்கில் காட்டாமல், பள்ளிக்கு வந்ததாக கையெழுத்து போடும் நிலையும் உள்ளது. சில இடங்களில் திடீர் விடுப்பு அறிவித்துவிட்டு பள்ளிக்கு மட்டம் போடுவதும் உண்டு. இது தவிர சில ஆசிரியர்கள் நீண்ட விடுப்பிலும் சென்றுவிடுகின்றனர். இதனால் பள்ளிகளில் குறிப்பிட்ட பாட ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இது போன்ற முறைகேடுகளை தடுக்க தற்போது பள்ளிக்கல்வி துறை அதிரடியாக சில நடவடிக்கைகளைஎடுத்துள்ளது.
அதன்படி, விடுப்பு எடுக்க விரும்பும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் முன் அனுமதி பெற வேண்டும். கட்டாயமாக விடுப்பு விண்ணப்பம் கொடுக்க வேண்டும். அப்படி செய்யாமல் விடுப்பு எடுத்தால் அவர்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், அல்லது பணியாளர்கள் மரணமடைந்தால் அவர்களுக்கு குடும்பஓய்வு ஊதியம் வழங்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment