சென்னை மாநகராட்சியிலுள்ள சுமார் 320 பள்ளிகளில் பயிலும் ஏறத்தாழ 85 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தில்... இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற உணவுகள் காலை உணவாகத் தினமும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து உள்ளாட்சித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், " சென்னை மாநகராட்சியில் காலை உணவுத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதை தமிழகத்திலுள்ள மற்ற மாநகராட்சிகளிலும் விரிவுப்படுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான குழு ஆலோசனை மேற்கொண்டது.
அப்போது முதல்வர், 'ஸ்கூல் பசங்க காலையில தெம்பா சாப்பிட்டாத்தானே நல்லா படிக்க முடியும். வெறும் மாநகராட்சிப் பள்ளிகள்'ல மட்டும் விரிபடுத்தாம, தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் இத்திட்டத்தை விரிவாக்கலாமே...' என்று கூறினார்.
இப்படி விரிவுப்படுத்த வேண்டுமென்றால், 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை ஆகிய துறைகளுடன் கலந்தாலோசித்துவிட்டு, விரிவான திட்ட அறிக்கையுடன் வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிப்ரவரியில் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளார்" என்றனர்.
காலை உணவுத் திட்டத்தில், தமிழ்நாட்டின் பாரம்பர்ய பச்சைப்பயிறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி, சாமைக் கஞ்சி, கொண்டக்கடலை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அளிக்குமாறும் முதல்வர் ஆலோசனை வழங்கினாராம். திட்ட அறிக்கை ரெடியாகிவிட்டால், வரும் கல்வியாண்டிலிருந்தே காலை உணவுத் திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் செயலாக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவர்.