சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள், ஏப். 19ம் தேதி காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட அறிவிப்பு: நாளை மறுநாள் காலை, 9:30 மணிக்கு, அரசு தேர்வுத்துறை இணையதளத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் பட்டியலை, 20ம் தேதி காலை, 9:00 மணி முதல், 26ம் தேதி வரை, தங்கள் பள்ளிக்கு சென்று, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.தனி தேர்வர்கள், வரும், 24ம் தேதி காலை, 9:00 மணி முதல், 26ம் தேதி வரை, www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தங்கள் பள்ளிகள் வழியாகவும், தனி தேர்வர்கள், தேர்வு மையங்கள் வழியாகவும், வரும், 22 முதல், 24 வரை விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் வேண்டுமா அல்லது மதிப்பெண்ணை மட்டும், மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை, தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டுமென்றால், கட்டாயம் விடைத்தாள் நகல் பெற வேண்டும்.
மறுமதிப்பீடுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் நகல் கேட்பவர்கள் மட்டும், தற்போது, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. அவர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கப்பட்ட பின், மறுகூட்டலுக்கும், மறுமதிப்பீடுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும்.விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய் கட்டணம் உண்டு. மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடத்துக்கு மட்டும், 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் பள்ளியில், இந்த கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அந்த சீட்டில் உள்ள விண்ணப்ப எண் அடிப்படையில், மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும். விடைத்தாள் நகல் வெளியிடும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் அறிவித்துள்ளார்.
தேர்வு முடிவுக்கானஇணையதளங்கள்!
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய, மூன்று இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். தேர்வர்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண்களுடன் முடிவை தெரிந்து கொள்ளலாம். மேலும், தங்களின் பள்ளிகளிலும் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள், ஏற்கனவே வழங்கிய, மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும்.தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது. ஜூன், 6 முதல், 13 வரை, இந்த தேர்வு நடக்கும். அதற்கு விண்ணப்பிக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment