பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வு சனிக்கிழமையுடன் முடிவடைந்ததால், ஞாயிற்றுக்கிழமை முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி ஏப்.12-ஆம் தேதிக்குள் அனைத்துப் பள்ளிகளின் ஆண்டு இறுதித் தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வுகளை முடிக்க வேண்டும் என கல்வித்துறைஉத்தரவிட்டது.அதன் அடிப்படையில் அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்று வந்தது. பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை மாலை வரை செயல்பட்டன. இந்த வகுப்புகளுக்கு சனிக்கிழமை முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோன்று 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை வரை தேர்வுகள் நடைபெற்றன.இதுதவிர பெரும்பாலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தேர்வுகள் கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பாக நிறைவடைந்தன. ஒருசில பள்ளிகள் வரும் திங்கள்கிழமை வரை செயல்படுகின்றன.
வழக்கமாக மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு 40 நாள்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 30 நாள்களும் விடுமுறை கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 50 நாள்களுக்கும் மேலாக கோடை விடுமுறை கிடைத்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித் துறை எச்சரித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்குஇப்போதே சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடும் தனியார்பள்ளிகள் குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை உறுதி என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment