நெல்லை: மருத்துவக்கல்விக்கான சீட் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் 150ல் இருந்து 250 ஆக வரும் கல்வியாண்டில் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 55 ஆண்டுகள் கடந்த பாரம்பரியம் மிக்கதாகும்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான தென்மாவட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். இங்குள்ள மருத்துவக்கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்களும் உயர்கல்வி படிப்புகளும் உள்ளன. நர்சிங் பட்டய மற்றும் பல்வேறு மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பு வசதிகளும் உள்ளன. விடுதி, ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
இங்கு எம்பிபிஎஸ் சீட் எண்ணிக்கையை 250ஆக உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கை தென்மாவட்ட மக்கள் மத்தியில் நீண்டகாலமாக இருந்துவருகிறது. தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வசதியும் மண்டல கேன்சர் மையம் வசதியும் வந்துள்ளது.இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துவருகிறது. இதனால் கூடுதல் டாக்டர்கள், நர்சுகள், பார்மசிஸ்டுகள் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படுகின்றன. மருத்துவக்கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தால் பயிற்சி டாக்டர்கள் மற்றும் நிரந்தர டாக்டர்கள் துறை சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வசதிகளும் உயர வாய்ப்புள்ளது.
இதனால் மருத்துவக்கல்விக்கான சீட் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என மருத்துவமனை நிர்வாகமும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய மருத்துவக்குழு மருத்துவக்கல்லூரிக்கு கடந்த சில மாதங்களில் இரண்டுமுறை நேரில் வருகை தந்து எம்பிபிஎஸ் சீட் உயர்த்துவதற்காக வாய்ப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினர். பேராசிரியர்கள் எண்ணிக்கை, பரிசோதனை கூடம், வகுப்பறை வசதிகள், விடுதி, கூட்ட அரங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு சமர்பித்துள்ளனர்.
தற்போது எம்எம்எசி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரிகளில் மட்டுமே 250 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. எனவே நெல்லைக்கு 250 சீட் கிடைத்தால் தமிழகத்தில் அதிக மாணவர்கள் பயிலும் 3வது மருத்துவக்கல்லூரியாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி சிறப்பு பெறும். சீட் எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் தொடர் முயற்சியால் பிரகாசமாக இருப்பதால் 250 ‘சீட்’ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனத்தெரிகிறது. இதுபோல் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியிலும் இந்த ஆண்டு 50 சீட் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment