பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோடை விடுமுறை முடிந்து 2019-20-ம் கல்வியாண்டில் ஜூன் 3-ந்தேதி தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும். இந்த சூழலில் ஜூன் 3-ந்தேதியன்று மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியும்போது பள்ளி வளாகம் தூய்மையானதாகவும், பாதுகாப்பானதாகவும் கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கீழ்க்கண்ட வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளி வளாகத்தினை தயார்படுத்திடுமாறு உரிய அறிவுரைகளை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* 3.6.2019 அன்று அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.
* பள்ளி திறப்பதற்கு முன் தினம் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வகுப்பறைகள் தூய்மையாக உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* அனைத்து பள்ளிகளிலும் உள்ள தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை பள்ளி திறக்கும் முன் தினமே உறுதி செய்து கொள்ள வேண்டும். கழிப்பறைகளில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் அதனை சரி செய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்திட வேண்டும்.
* பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியும் போது அவர்களை அன்புடன் வரவேற்று நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கித் தருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் போன்றவை அனைத்தும் பள்ளி திறக்கும் நாளன்றே வழங்கப்பட வேண்டும்.
* பேருந்து பயண அட்ைட தேவைப்படும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் காலதாமதமின்றி பேருந்து பயண அட்டைகள் பெற்றுத் தருவதற்கு போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள தண்ணீர் ெதாட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரித்து மாணவர்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
* பள்ளி மாணவர்களுக்கு வசதியான காற்றோட்டமான சூழ்நிலையை உருவாக்கித் தரும் பொருட்டு வகுப்பறைகளில் பழுதடைந்த நிலையில் மின் விசிறி, மின் விளக்கு மற்றும் மின் இணைப்பு ஏதேனும் இருப்பின் அவற்றை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்.
* பள்ளி குழந்தைகளுக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர்மின்னழுத்த மின் கம்பிகள், மின் கசிவுகள், பழுதடைந்த கட்டடங்கள், புல் புதர்கள், குழிகள் போன்றவை பள்ளி வளாகத்தில் இருந்தால் அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலினை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment