முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். AUCET என தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்படாது என்றும் அறிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறைக்கும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவிற்கும் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதன் காரணமாக பி.இ.,பி.டெக்., மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை (TANCET) அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாதது என தெரிவிக்கப்பட்டது. அதேபோல சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் AUCET நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என கடந்த மாதம் 28ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 29ம் தேதியே TANCET நுழைவுத்தேர்வை நடத்தும் குழு உயர்கல்வித்துறை சார்பில் மாற்றி அமைக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்த குழுவில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். அதேபோல, தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் ஒரு உறுப்பினராக மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்பாக இவர் குழுவின் இணை தலைவராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர ஒரே ஒரு பொது தேர்வு மட்டும் எழுதினால் போதுமானது என்று உயர்கல்வித்துறை நேற்று அறிவித்தது. TANCET, AUCET என இரு நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு பரிந்துரையும் முன்வைக்கப்பட்டது. இதற்கு தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தின் இயக்குனருடன் கலந்து ஆலோசித்த பிறகு தான் இது தொடரான அறிவிப்பை வெளியிடுவோம் என அண்ணா பல்கலை. அறிவித்தது.
இந்த நிலையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா, தற்போது முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர, டான்செட் (TANCET ) என்ற ஒரே ஒரு நுழைவுத்தேர்வை எழுதினால் போதுமானது. மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. டான்செட் தேர்வை கடந்த முறை போலவே இந்த முறையும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment