தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்த்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 14ந் தேதி வரை 21 நாட்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து, மளிகை, மருந்து மற்றும் உணவு பொருட்களுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டதுடன், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
ஆனால், ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகும் கொரோனா கட்டுக்குள் வராததால், ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மேற்கொள்ள மத்திய உள்துறை அனுமதி அளித்தது. இதனால், தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதலை வெளியிடுவது அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்த்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு அரசு ஏற்கனவே அளித்த விலக்குகள் தொடரும் எனவும் நோய்தொற்று குறைந்தால், வல்லுநர் குழு ஆலோசனைப்படி நிலைமைக்கு தகுந்தால் போல் முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment