கொரோனா தொற்று தவிர்ப்பு நடவடிக்கைகளுடன் நாளை முதல் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் என்று பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா சாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழகத்தின் அனைத்து சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் மற்றும் துணை பதிவுத்துறை தலைவர்களுக்கு பதிவுத் துறை தலைவர் ஜோதி நிர்மலா சாமி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசு அலுவலகங்களில் 20-ந் தேதி முதல் தேவையான ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களும், சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் 33 சதவீத அளவிலும் பணியாற்றலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் 20-ந் தேதி(நாளை) முதல் அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களும் செயல்பட ஆணையிடப்படுகிறது.
அலுவலகத்துக்கு வரும் ஒவ்வொருவருக்கும் நுழைவுவாயிலில் கைகழுவுமிடம் அமைத்திருக்க வேண்டும். கை கழுவிய பின்னரே உள்ள வர வேண்டும் என்ற அறிவிப்பு வைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், ஒரு மேஜையில் சானிடைசர் வைத்து அனைவரும் அதை பயன்படுத்த செய்ய வேண்டும்.
அலுவலர்கள் வரும்போது விரல் ரேகை பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ரேகை பெறுவதற்கு ஒன்று அல்லது இரண்டு தனி விரல் ரேகை எந்திரத்தை பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளி விட்டு தனி மேஜையில் அது வைக்கப்பட வேண்டும். அங்கு சானிடைசர் வைக்கப்பட்டு, ரேகை வைக்கும் முன்பும், பின்னரும் எந்திரத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
பணியாளர்களும், பொதுமக்களும் முககவசம் அணிந்திருக்க வேண்டும். புகைப்படம் எடுக்கும்போது மட்டுமே அதை மக்கள் கழற்றிக்கொள்ளலாம். காத்திருக்கும் மக்களுக்கு இடையே இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கும்பல் கூட விடக்கூடாது.
உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
ஒரு நாளுக்கு 24 டோக்கன்
55 வயதுக்கு மேற்பட்டவர்களையும் ஏற்கனவே உடல்நலம் குறைவாக இருப்பவர்களையும் மக்களுடன் தொடர்பு கொள்ளும் பணிகளுக்கு அனுமதிக்க வேண்டாம். பதிவுக்கு, ஒரு மணி நேரத்துக்கு 4 டோக்கன் வீதம் ஒரு நாளுக்கு 24 டோக்கன் என்ற வகையில் மென்பொருள் மாற்றப்பட்டுள்ளது.
மக்கள் மீண்டும் அலுவலகத்துக்கு வராத வகையில் பதிவுப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். குறு பணப்பரிவர்த்தனை எந்திரத்தில் 4 இலக்க குறியீட்டு நம்பரை மக்கள் பதிவு செய்ய வேண்டியதுள்ளதால் அனைத்து கட்டணங்களையும் இணைய வழியிலேயே செலுத்த வேண்டும். அந்த எந்திரத்தை பயன்படுத்தும் நிலை வந்தால் சானிடைசரை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். அலுவலக கதவுகளை திறந்து வைப்பதன் மூலம் வீணாக கைகளை கதவுகள் மேல் மக்கள் வைப்பது தவிர்க்கப்படும்.
கட்டுப்பாட்டு பகுதிகள் பற்றிய விவரங்களை மாவட்ட கலெக்டரிடம் வாங்கிக் கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர் ஆவணப் பதிவுக்கு வந்தால் அதை பரிசீலிக்க வேண்டாம். திருப்புச் சீட்டு கொடுத்து நிராகரிக்க வேண்டும்.
கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சார் பதிவாளர் அலுவலகம் இருந்தால், அதன் அருகில் இருக்கும் துணை பதிவுத் துறை தலைவர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், பக்கத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் ஏதாவது ஒன்றுக்கு மாற்றிக் கொள்ளலாம். மாற்றப்பட்ட இடம் பற்றிய தகவலை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒட்டி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கு பணியாளரை அலுவலகத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டாம்.
No comments:
Post a Comment