புதுச்சேரியில், பி.எச்டி., மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குவதற்கு, புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., படிப்பவர்களுக்கு, கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி அரசு கல்லுாரிகளில் படிக்கும் பி.எச்டி., மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படாமல் இருந்தது.
இந்த குறையை போக்கும் வகையில், கடந்த காலத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் பி.எச்டி., படிப்பவர்களுக்கு மட்டும் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை, புதுச்சேரி அரசு அறிவித்தது.புதுச்சேரி அரசு கல்லுாரிகளை பொருத்தவரை, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் தமிழ் பாடத்துக்கு மட்டுமே பி.எச்டி., படிப்பு அப்போது இருந்தது. இதனால், தமிழ் பாடத்தில் பி.எச்டி., படித்தவர்கள் மட்டும் அரசின் ஊக்கத் தொகையை பெற்று வந்தனர்.
தற்போது, அதிக எண்ணிக்கையிலான மாணவ மாணவிகள் பயனடையும் வகையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து, புதிய அரசாணையை, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை, நடப்பு 2018-19ம் கல்வியாண்டில் இருந்தே அமலுக்கு வந்துள்ளது.புதிய திட்டத்தின்படி, அரசு, சொசைட்டி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பி.எச்டி., படிப்பவர்களுக்கு எந்த பாடமாக இருந்தாலும் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும். அதாவது, பி.எச்டி., படிப்பவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாயும், ஆராய்ச்சி பணிக்காக புத்தகம், இதழ்கள் வாங்குவது, டேட்டா சேகரிப்பது, படிப்பு தொடர்பான பொருட்கள் வாங்குவது போன்ற செலவுகளுக்காக, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உதவித் தொகையை பெறுவதற்கு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், முழுநேரமாக பி.எச்டி., படிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் என்ற அடிப்படையில், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திலும், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியிலும் மட்டுமே தற்போது பி.எச்டி., படிப்புகள் உள்ளன.
பாரதிதாசன் கல்லுாரியில் ேஹாம் சயின்ஸ் பாடத்தில் மட்டும் பி.எச்டி., உள்ளது. இதில் படிக்கும் மாணவிகளுக்கு, புதிய திட்டத்தின் கீழ் கல்வி ஊக்கத் தொகை கிடைக்கும்.பட்ட மேற்படிப்பு மையத்தில் வணிகவியல், கணக்கு, வேதியியல், உயிரியல், விலங்கியல், ஆங்கிலம் உள்ளிட்ட 8 பாடங்களில் பி.எச்டி., படிப்பு நடத்தப்படுகிறது. புதிய திட்டத்தின் மூலமாக, இங்கு படிக்கும் 107 மாணவ மாணவிகள் பயனடைவர்.
No comments:
Post a Comment