சட்டசபை செயலகத்தில், துப்புரவு பணியாளர் பதவிக்கு, பி.டெக்., - எம்.டெக்., படித்தவர்கள் விண்ணப்பித்திருப்பது, அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மக்களிடம் இன்னமும், அரசு வேலை மீதான மோகம் குறையவில்லை. அதிகம் படித்தவர்களும், எடுபிடி வேலையாக இருந்தாலும், அரசு வேலையாக இருந்தால் நல்லது என, நினைக்கின்றனர்.
அதற்கேற்ப, வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளது.பொறியியல் உட்பட, தொழிற் கல்வி பயின்றவர்கள் பலர், வேலையின்றி தவித்து வருகின்றனர். படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை என்பதால், எந்த வேலை கிடைத்தாலும் செய்வதற்கு, பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தயாராக உள்ளனர்.சமீபத்தில், சென்னை, சட்டசபை செயலகத்தில் காலியாக உள்ள, 14 துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு, விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இப்பணிக்கு, 3,900க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள். எம்.டெக்., - பி.டெக்., - எம்.பில்., - எம்.காம்., - பி.காம்., - பி.எஸ்சி., - பி.எட்., - பி.ஏ., டிப்ளமா - எம்.சி.ஏ., பட்டதாரிகள் விண்ணப்பித்துஉள்ளனர்.இது குறித்து, சட்டசபை செயலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:துப்புரவு பணியாளர் பணிக்கு வந்த விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பட்டியலை, சட்டசபை செயலக இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம்.
சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின், ஆட்களை நியமிக்க முடிவு செய்திருந்தோம். தற்போது, தேர்தல் முடிந்த பின், நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பட்டதாரிகளுக்கு, வெளியில் எந்த வேலைக்கு சென்றாலும், 10 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும். துப்புரவு பணியாளர் என்றாலும், 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பதால், பட்டதாரிகளும் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment