வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது.
வடமாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வது குறைந்து, வறண்ட வானிலை நிலவியது. சில இடங்களில் வெயில் கொளுத்தியது. தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 70 மிமீ மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா, குமரிக்கடல் ஒட்டிய பகுதியில் காற்றழுத்தம் நிலை கொண்டு இருப்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. அதனால், தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் மிதமான மழை பெய்யும். 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் 29, 30, 31ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment