திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி, அதிரடி காட்டுவதில் பெயர் போனவர். அதனாலேயே பயமின்றி மாவட்ட மக்கள் கலெக்டரிடம் நேரடியாகவும், வாட்ஸ் அப், மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கின்றனர். புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளை எடுத்து அதிரடி காட்டுவார். இந்த அதிரடி நடவடிக்கையால் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கலெக்டரை கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் வட்டார வளர்ச்சி தொடர்பாக வாட்ஸ் அப் ஆடியோ மூலம் அலுவலர்களை கண்டித்திருந்தார் கலெக்டர். அந்த ஆடியோவில், “ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முறையாகச் செயல்படுத்துவது இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. திங்கட்கிழமை உங்களுக்கு உச்சக்கட்டம். ஒண்ணு நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா, இல்ல நீங்கள் பணியில் இருக்கிறீர்களா? என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கணும். திங்கட்கிழமைக்குள் அனைவருக்கும் வீடு ஒதுக்கவில்லையென்றால் அன்னைக்கு எத்தனை பேரை வேண்டுமானாலும் சஸ்பெண்டு செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
நீங்கள் தவறு செய்வதைப் பார்த்துக்கொள்ள, நான் இங்கு உட்காரவில்லை. தப்பு செய்பவர்களுக்குக் காவல் காப்பவன் நான் இல்லை” என்று பேசியிருந்தார். இந்த வாட்ஸ் அப் ஆடியோவால், ஊராக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆடிப்போனார்கள். கலெக்டரின் எச்சரிக்கையை அடுத்து, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள், எனத் திருவண்ணாமலை ஊரக வளர்ச்சித்துறையே இரண்டு நாள்களாக இரவு பகல் பாராமல் அலுவலகத்திலேயே தங்கி வேலை பார்த்து, 2000 பயனாளர்களுக்கு வீடுகட்டும் ஆணையைத் தயார் செய்து சம்பந்தப்பட்ட பயனாளர்களிடம் ஒப்படைக்கும் வேளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட மக்களிடம் பேசினோம். “கலெக்டர் சார் இந்த மாவட்டத்துக்கு வந்ததிலிருந்து மக்களுக்கான பணியை நேரடியாக இறங்கிச் செய்கிறார். மாவட்ட மக்களிடம் எளிமையாகப் பழகுகிறார். எங்களைப் போன்று ஏழ்மையானவர்களின் வீட்டிற்கு வந்து எங்களோடு சரிசமமாக அமர்ந்து நாங்கள் சமைத்த உணவுகளைச் சாப்பிடுகிறார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்குப் பணம் இல்லாத மாணவர்களுக்கு உதவி செய்கிறார். பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதிகளுக்குப் பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.
புகார்களை போன் மூலம் தெரிவிக்க அழைத்தால் அவரே போன் எடுத்து குறைகளைக் கேட்டு அறிகிறார். சில சமயங்களில் போன் எடுக்கவில்லை என்றால், மீண்டும் அவரே அழைத்து குறைகளைக் கேட்கிறார். இப்படி பலவற்றை எங்களுக்குச் செய்கிறார்” என்றனர். மேலும் அவர்கள், “
கலெக்டருக்கு நாங்கள் முழு சப்போர்ட் அளித்து வருகின்றோம். கலெக்டருக்கு எதிராக அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர். கலெக்டரை மாவட்டத்தை விட்டு அனுப்புவதற்குக் குறியாகவே செயல்படுகின்றனர். கலெக்டருக்கு ஆதரவாக நாங்கள் வீதிக்கு வந்து போராடத் தயாராக இருக்கின்றோம்” என்றனர்.
இதுகுறித்து கலெக்டர் கந்தசாமியிடம் பேசினோம். ``என்னுடைய கடமையைச் செய்கிறேன் அவ்வளவுதான். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதாகவும், பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ஆணைகளை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் தொடர்ந்து எனக்குப் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையிலேயே நான் நடவடிக்கை எடுத்தேன். 2 நாள்களில், 2000 வீடுகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றால், அதிகாரிகள் பணியைச் சரியாகச் செய்திருந்தால் மாவட்டத்தில் குடிசை வீடுகளே இல்லாமல் செய்து இருக்கலாம்.
அதிகாரிகள் தங்களது கடமையைச் சரியாகச் செய்தால், நான் ஏன் அவர்களைக் கேள்வி கேட்கப் போகிறேன். தற்போது ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் பணியில் தீவரம்காட்டி பணிகளைச் செய்து முடிக்கின்றனர். இது பாராட்டுக்குரியது என்பதால் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் தவறுகள் நடந்து புகார் வந்தால், நடவடிக்கை கண்டிப்பாக பாயும்” என்று முடித்துக்கொண்டார்.
No comments:
Post a Comment