கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு மார்ச் 31ந்தேதி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்பின்னர் கடந்த 24-ந் தேதி நாட்டு மக்களுக்கு 8 மணியளவில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக அன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தொடர்ந்து 21 நாட்கள் முடக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டார். 144 தடை உத்தரவு தமிழகத்தில் மார்ச் 31ந் தேதி வரை இருக்கும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை நீட்டிப்பது என முடிவாகியுள்ளது.
இதேபோன்று, வீடுகளுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு தொடர் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைக்க மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கிராமம், நகரங்களில் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள் பண வசூலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
உணவகங்கள், மளிகை கடைகள் நாள் முழுவதும் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அவற்றுக்கு நேர வரம்பு எதுவும் குறைக்கப்பட வில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.
No comments:
Post a Comment