தமிழகமெங்கும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், உயரதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி அவரது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை தர தமிழகத்தில் 4 மருத்துவமனைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தாம்பரம் சானடோரியம், மதுரை தோப்பூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனாவுக்காக மருத்துவமனை அமைகிறது.
சென்னை ஆவடியில் வெளிநாட்டிலிருந்து வந்த 32 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.
வெளிநாட்டிற்கு சென்று திரும்பிய 3 நபர்கள், அரசு உத்தரவை மீறி வெளியே சென்றதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஒருவர் மீதும், கோயம்பேடு பகுதியை சேர்ந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளது.
மதுரையில் ஊரடங்கை மீறி பைக்கில் சாலையில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஊரடங்கு உத்தரவு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய குற்றவியல் சட்டம் 270ஆவது பிரிவு படி, இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வீரியமிக்க வைரஸ் பரவலுக்கு, தெரிந்தே எவர் ஒருவர் காரணமாக இருப்பது உறுதி ஆனால், 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
அரசின் உத்தரவை மீறி, ஆபத்தான வைரஸ் தொற்று பரவுவதற்கான செயலில் ஈடுபட்டாலோ அல்லது அலட்சியமாக நடந்து கொண்டாலோ, இந்திய குற்றவியல் சட்டம் 269ஆவது பிரிவின் கீழ், 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். கொரோனா வைரஸ் அறிகுறியுடன் தனிமை முகாம்களில் தங்க அறிவுறுத்தப்பட்டவர்கள், அரசின் உத்தரவுக்கு கீழ் படியாமல் இருந்தால், இந்திய குற்றவியல் சட்டம் 271 வது பிரிவு படி, 6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணாசாலை காவல் உதவி ஆய்வாளர் ரசீத், சாலையில் வருபவர்களை கையெடுத்து கும்பிட்டு தயவு செய்து வெளியே வராதீர்கள் என கோரிக்கை விடுத்தார். மேலும், உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வெளியே யாரும் வராதீர்கள். உங்களை வீட்டில் தான் இருக்க சொல்கிறோம். வேறு எதுவும் உங்களிடம் கேட்கவில்லை. தற்செயலாக தெரியாமல் வந்தால் கூட திரும்பி போய் விடுங்கள் எனக் கும்பிட்டு கேட்டுக்கொள்கிறார்.
No comments:
Post a Comment