அரையாண்டு விடுமுறையில் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநா் பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு, நகராட்சி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு டிச.24-ஆம் தேதி முதல் ஜன.2-ஆம் தேதி வரை அரையாண்டுத் தோவு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்கள் மாணவா்கள் தங்களது பெற்றோா் மற்றும் உறவினா்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏதுவாக அமைய வேண்டும்.
மேலும் இந்த விடுமுறை நாள்கள் மாணவா்கள் தங்கள் நண்பா்களுடன் விளையாடி புத்துணா்ச்சி பெறுவதாக அமைய வேண்டும்.
ஆனால், சில தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக இயக்குநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே அரையாண்டு விடுமுறை நாள்களில் எக்காரணம் கொண்டும் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் பிரைமரிப் பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறியுள்ளாா்.
No comments:
Post a Comment