டிசம்பர் 16ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் நெஃப்ட் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி அமலுக்கு வருவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகமாக மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக அரசு தரப்பிலிருந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு படியாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக நெஃப்ட் பரிவர்த்தனைக் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
நெஃப்ட் பரிவர்த்தனைக் கட்டணம் ரத்து
தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம் அல்லது ’நெஃப்ட்’ பரிவர்த்தனைகளை மக்கள் மேற்கொள்ளும்போது, சம்பந்தப்பட்ட வங்கிகள் குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கும். வருகிற 2020 ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த நெஃப்ட் பரிவர்த்தனைக் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. நெஃப்ட் (NEFT) பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்பதால் மக்கள் இன்னும் அதிகமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாள் முழுவதும் நெஃப்ட் பரிவர்த்தனை செய்யலாம்
நெஃப்ட் பரிவர்த்தனைக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வாரத்தின் ஏழு நாட்களும் இப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வசதியையும் ரிசர்வ் வங்கி தற்போது ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, டிசம்பர் 16 ஆம் தேதியிலிருந்து நாள் முழுவதும் நெஃப்ட் (NEFT) பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும். இதற்கு முன்னர் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரையில் மட்டுமே நெஃப்ட் பரிவர்த்தனைகளுக்கான தொகை பரிமாற்றம் செய்யப்படும். அதேபோல, வங்கிகள் இயங்கும் சனிக் கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையில் மட்டுமே நெஃப்ட் பரிவர்த்தனைகள் செயல்படும். இந்நிலையில் தற்போது நெஃப்ட் பரிவர்த்தனைகள் மேலும் எளிதாக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வங்கிகளுக்கு உத்தரவு
நெஃப்ட் (NEFT) பரிவர்த்தனைகள் தொடர்பாகவும், பரிவர்த்தனை நிறைவடைந்ததை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுஞ்செய்திகளை முறையாக அனுப்பவேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதேபோல, நெஃப்ட் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான நிதிநிலை வங்கிகளிடம் இருக்கும்படி தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment