உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு சமீபத்தில் இரு தேதிகளை அறிவித்து பதில் சொன்னது தேர்தல் ஆணையம். தற்போது ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மீண்டும் அந்த கேள்விக்கு உயிர் கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு தள்ளிப்போடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் கடந்த வாரம் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
ஆனாலும் அனைத்துப் பகுதிகளுக்கும் தேர்தலை நடத்தாமல் ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதுவும் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும், பேரூர், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்யாமல் எப்படி தேர்தல் நடத்தமுடியும் என திமுக உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த தடை விதித்தது.
நான்கு மாதங்களுக்குள் தொகுதி மறுவரையறை செய்து அந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தவேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதனால் திட்டமிட்டபடி மற்ற 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி தேர்தல் வேலைகளில் மும்முரமாக இறங்கின.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment