
கன்னியாகுமரியில் 2வது நாளாக இன்று கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலையால் 5 படகுகள் இழுத்து செல்லப்பட்டு உள்ளன.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் மார்த்தாண்டம் அருகே கொட்டில்பாடு, வள்ளவிளை, குளச்சல், கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குளச்சல், கொட்டில்பாடு மற்றும் வள்ளவிளை பகுதிகளில் கடல் அலைகளின் வேகம் அதிகரித்துள்ளது.
கடல் சீற்றம் காரணமாக, கடல்நீர் வீட்டுக்குள் புகுந்தது. இதனை தொடர்ந்து வள்ளவிளை கரையோரம் உள்ள மீனவர்களை முகாம்களுக்கு மாற்றும் பணி நடைபெற்றது. கடல்நீர் வீட்டுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாற்று இடம் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.
கடல் சீற்றத்தினால் நேற்று கொட்டில்பாடு நவஜீவன்காலனி முன்புள்ள கடற்கரையில் அமைந்த ஜெபக்கூடம் அருகே உள்ள வீட்டின் பின் பகுதி கடல் சீற்றத்தினால் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால், காயமின்றி தப்பினர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். மேலும் அதன் அருகில் உள்ள தோட்டங்களிலும் கடல்நீர் புகுந்தது. மேலும் குறும்பனை பகுதியில் கட்டுமரங்களை கடற்கரையில் வைக்க முடியாமல் மேடான பகுதியில் மீனவர்கள் வைத்தனர்.
கொல்லங்கோடு அருகே வள்ளவிளையில் நேற்று காலையில் இருந்தே கடல் சீற்றமாக காணப்பட்டது. இந்த கடல் சீற்றம் காரணமாக 3 வீடுகள் இடிந்தன. மாலை 5 மணிக்கு மேல் கடல் சீற்றம் அதிகரித்துக்கொண்டே சென்றது.
இதைத்தொடர்ந்து வள்ளவிளையில் கடற்கரையோரம் வசித்து வந்தவர்களில் 70 குடும்பங்கள் தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடல் சீற்றம் காரணமாக நேற்று கன்னியாகுமரி, குளச்சல், தேங்காப்பட்டணம், நீரோடி உள்பட மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், அவர்களது படகுகள், கட்டுமரங்கள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கன்னியாகுமரி முழுவதும் கடலோர பகுதிகளில் அரசு அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தேங்காய்பட்டினம், இரயுமன் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 படகுகளை கடல் அலை இழுத்து சென்றுள்ளது. கடல் சீற்றத்தினால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் படகுகளும் அலையால் இழுத்து செல்லப்பட்ட சம்பவத்தினால் மீனவர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
No comments:
Post a Comment