சித்தராமையா இரு தொகுதிகளில் போட்டியிடுவதில் தவறில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிஉள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12–ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்–மந்திரி சித்தராமையா, மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்ததுடன், வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த தொகுதியில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்தது. இதையடுத்து, சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி என இரு தொகுதிகளில் போட்டியிட முதல்–மந்திரி சித்தராமையா முடிவு செய்தார்.
இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதே நேரத்தில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டால் சித்தராமையா தோல்வி அடைந்து விடுவார் என்ற பயத்தில் பாதாமியிலும் போட்டியிட முடிவு செய்திருப்பதாக பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கடுமையாக தாக்கி பேசி வருகின்றன. பாதாமி தொகுதியில் போட்டியில் வரும் செவ்வாய் கிழமை சித்தராமைய வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சித்தராமையா இரு தொகுதிகளில் போட்டியிடுவதில் தவறில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிஉள்ளார். கார்கே பேசுகையில் பிரதமர் மோடி 2014 பாராளுமன்றத் தேர்தலில் வாரணாசி மற்றும் வதோதரா தொகுதிகளியில் போட்டியிட்டதை நினைவுப்படுத்தினார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வியடைவார் என்பது பாரதீய ஜனதாவின் பிரசாரம் மட்டுமே எனவும் குறிப்பிட்டார். சித்தராமையா இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார், அதில் என்ன தவறு இருக்கிறது? இது கட்சியின் உயர்மட்ட முடிவு.
பாதாமி தொகுதி மக்கள் சித்தராமையா தங்கள் தொகுதி உறுப்பினராக வேண்டும் என்று விரும்புகிறார்கள் எனவும் விளக்கம் அளித்து உள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.
No comments:
Post a Comment