பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக நேற்று முன்தினம் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் போய்ச் சேர்ந்தார். அவரை அந்த நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லோப்வென், விமான நிலையத்துக்கு சென்று நேரில் வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி, சுவீடன் நாட்டின் மன்னர் 16-ம் காரல் கஸ்டாபை நேற்று சந்தித்து பேசினார். பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர். சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ‘நார்டிக்’ நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் இந்தியா பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற்றது. சுவீடன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், நார்டிக் நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வெனும் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சுவீடன் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து பிரிட்டன் புறப்பட்டார்.
ஹீத்ரோ விமானநிலையம் வந்து சேர்ந்த பிரதமர் மோடியை பிரிட்டன் வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் நேரில் வந்து வரவேற்றார். 18 ஆம் தேதி (இன்று) காலை இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை, பிரதமர் மோடி சந்திக்கிறார். பிரிவினைவாதம், எல்லைதாண்டிய பயங்கரவாதம், விசா மற்றும் குடியேற்றம் தொடர்பாக அவர்கள் விவாதிக்கின்றனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதையடுத்து, லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்துக்கு சென்று அங்கு நடைபெறும் அறிவியல் கண்காட்சியை மோடி பார்வையிடுகிறார். லண்டனில் வசிக்கும் இந்திய சமூகத்தினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். லண்டன் தேம்ஸ் நதிக்கரையோரம் நிறுவப்பட்டு உள்ள 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய தத்துவஞானி மற்றும் சமூக சீர்திருத்தவாதி பசவேஸ்வரா சிலைக்கு மரியாதை செய்கிறார்.
அன்று மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தையும் மோடி சந்தித்து பேசுகிறார். காமன்வெல்த் தலைவர்களில், 91 வயது ராணி எலிசபெத் தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ள மூன்று பிரதமர்களில் மோடியும் ஒருவர் ஆவார்.
19 மற்றும் 20-ந் தேதியும் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டின் முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் வர்த்தகம், மேம்பாடு, கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில் 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 19-ந் தேதி மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.
20-ந் தேதி மாநாடு வின்சர் காஸ்டில் அரண்மனையில் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வாக காமன்வெல்த் தலைவர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது உதவியாளர்கள், ஆலோசகர்கள் துணையும் இல்லாமல், எதையும் திட்டமிடாமல் தலைவர்கள் பேசிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு 20-ந் தேதி மோடி ஜெர்மனி நாட்டுக்கு செல்கிறார். அங்கு 4-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஏஞ்சலா மெர்கலை அவர் சந்தித்து பேசுகிறார்.
No comments:
Post a Comment