பெர்லின்,
25-வது காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு லண்டன் நகரில் நடந்தது. இதில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி இங்கிலாந்து ராணி எலிசபெத் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 4 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றார்.
அவர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து, மோடி தனது இங்கிலாந்து பயணத்தை முடித்து கொண்டு லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இன்று ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “ ஜெர்மனி அதிபருடனான சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும், இந்தியா- ஜெர்மனி ஒத்துழைப்பு விவகாரத்தில் உள்ள பல்வேறு அம்சங்கள் இருவரும் விவாதித்தோம். அதேபோல், பிற உலக விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினோம்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், “ இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மோடியின் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நலன்கள் மற்றும் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தனது நான்காவது முறை பதவியேற்புக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களுக்கிடையில் நடக்கும் முதல் சந்திப்பாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment