தமிழகம் முழுவதும் வணிகர்கள் 3-ந் தேதி கடையடைப்பு.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளாகவே காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசும், மத்திய அரசும் மாறி மாறி தமிழகத்தை வஞ்சித்தும் முரண்பட்ட நிலைகளை கையாண்டும் வந்திருக்கின்றன. இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை கொண்டு இருக்கிறது.
இதுதொடர்பாக கடந்த 29-ந் தேதி தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தியது. அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வணிகர்கள் வருகிற 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கடையடைப்பு செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது.
அதன்படி, வருகிற 3-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 21 லட்சம் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டு இருக்கும். காவிரி பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே நாங்கள் 2 முறை கடையடைப்பு போராட்டம் நடத்தி இருக்கிறோம்.
இப்போது நாங்கள் அறிவித்து இருக்கும் கடையடைப்பு போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு இறுதி வடிவம் கொடுக்கும் என்று நம்புகிறோம். விவசாயிகளும், வணிகர்களும் பின்னி பிணைந்தவர்கள். இது அனைவருடைய பொதுவான நீர் ஆதார பிரச்சினை ஆகும்.
பா.ம.க. வருகிற 11-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது. ஒரே போராட்டம், ஒரே கோஷம் என்ற அடிப்படையில் 3-ந் தேதி நடக்கும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த கடையடைப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் மற்றும் பொதுமக்களும் ஆதரவு தரவேண்டும்.
கடையடைப்பு யாருக்கும் வலுசேர்ப்பதற்காக நடத்தவில்லை. தமிழகத்தின் வாழ்வாதாரத்துக்கு வலுசேர்க்கவே இதை செய்கிறோம். கடையடைப்பினால் எங்களுக்கு பல கோடிகள் இழப்பு இருந்தாலும், நம்முடைய நீர் ஆதாரம் வீணாகி விடக்கூடாது என்பதற்காகவே இதை செய்கிறோம். விவசாயிகள் வீழ்ந்தால், வியாபாரமும் வீழ்ந்து போகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது, தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவர் வெங்கடசுப்பு, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதல்நிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு பர்னிச்சர் சங்க தலைவர் சந்தானபதி உள்பட பலர் உடன் இருந்தனர்.
தமிழகம்-புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில் குடிநீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் வருகிற 3-ந் தேதி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காவிரி டெல்டா விவசாயிகள் நல உரிமை சங்க தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் கட்சியினர் கொள்கை அளவில் வேறுபட்டு இருந்தாலும் காவிரி பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, மீனவர் பிரச்சினை, இலங்கை பிரச்சினை ஆகியவற்றில் எல்லோரும் ஒன்று சேர வேண்டும். இது ஆரம்பமாக இருக்கட்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி சாலை மறியல், ரெயில் மறியல், விமான நிலையங்கள் முற்றுகை, கடையடைப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும். வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையனும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment