மக்களுடன் நான் கலக்கவிருந்த பயணத்தை அரசியலாக்குகிறார்கள்: கமல்ஹாசன் விமர்சனம்...
சென்னை,
வரும் ஏப்ரல் 4ம் தேதி, திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிறப்புரையாற்ற 3-ம் தேதி சென்னையில் இருந்து ரயில் மூலம் திருச்சி செல்கிறார் கமல்ஹாசன். அப்போது 6 ரயில் நிலையங்களில் அவரை மக்கள் நேரில் சந்திக்கலாம் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்து இருந்தது.
மதியம் 2.08 மணிக்கு தாம்பரம், 2.38க்கு செங்கல்பட்டு, 3.50க்கு விழுப்புரம், மாலை 4.28க்கு விருத்தாசலம், 5.04க்கு அரியலூர், 6.30க்கு திருச்சி ஆகிய 6 ரயில் நிலையங்களில் மக்கள் அவரை நேரில் சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, கமல்ஹாசன் ரயில் நிலையங்களில் மக்களை சந்திப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. ரயில் நிலையங்களை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தெற்கு ரயில்வேயிடம் 3 பேர் மனு அளித்து இருந்தனர்.
இந்த நிலையில், தனது மக்கள் சந்திப்பு திட்டத்தை கமல்ஹாசன் ரத்து செய்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “ மக்களுடன் நான் கலக்கவிருந்த பயணத்தை அரசியலாக்குகிறார்கள் . அதற்கு ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். மக்கள் நலனை மய்யமாகக் கொண்ட கட்சி இது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும் மக்களுக்கும் இடையூறின்றி செய்து விடுவோம் திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே” என்று தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment