8 மணி நேரத்தில் அதிர்ச்சி: ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் தகவல்தொடர்பை இழந்தது: இஸ்ரோ தகவல்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 48மணி நேரத்துக்கு முன், ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ தகவல் தொடர்பு செயற்கைகோள் தகவல்தொடர்பை இழந்தது என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) அதிர்ச்சி தெரிவித்துள்ளது
தகவல் தொடர்பு வசதிக்கான அதிநவீன, 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி. எப்- 8' ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, கடந்த 29-ம் தேதி மாலை, 4:56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எந்திரம் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன், விண்ணில் செலுத்தப்பட்ட, ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோள், ஏவப்பட்ட, 17:50 நிமிடங்களில், பூமியில் இருந்து, 170 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் ஜிசாட்-6ஏ செயற்கைகோளில் இருந்து எந்தவிதமான சிக்னலும் வரவில்லை, முற்றிலும் தகவல் தொடர்பை இழந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பெங்களூரில் இருந்து 180கி.மீ தொலைவில் உள்ள ஹசன் நகரில் செயற்கைக்கோளை கட்டுப்படுத்தும், மாஸ்டர் கன்ட்ரோல் பெசிலிட்டி(எம்சிஎப்) அமைந்திருக்கிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று பூமியின் முதல் சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக முடித்த செயற்கைக்கோள் 2-ம் வட்டப்பாதைக்குள் நுழைந்திருக்கிறது செயற்கைக்கோளில் உள்ள எல்ஏஎம் எனப்படும் திரவ எரிபொருளில் ஓடும் மோட்டாரும் அப்போது நன்றாக செயல்பாட்டில் இருந்துள்ளது.
சனிக்கிழமை காலையில் 10.51 மணிக்கு 2-ம் வட்டப்பாதை சுற்றை தொடங்கிய செயற்கைக்கோள் அதையும் வெற்றிகரமாக தொடங்கிய 51 நிமிடங்கள் வரை சிக்னல்கள கட்டுப்பாட்டுத் தளத்துக்கு அளித்துள்ளது. ஆனால், அதன்பின் செயற்கைக்கோளில் இருந்து அனுப்பப்படும் சமிக்கைகள் வராமல் துண்டிக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயற்கைக்கோளில் உள்ள மின்சாதனத்தில் கோளாறா, அல்லது மின்மோட்டாரில் சிக்கலா, ஆன்டனாவில் இருந்த சிக்னல்கள் அனுப்புவதில் பிரச்சினையா என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, செயற்கைக்கோள் நிலை குறித்து இஸ்ரோ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 29-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்- 8' ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைக்கோளில் இருந்து 2 நாட்களுக்கு பின் சிக்னல்களை இழந்து, தகவல்தொடர்பை இழந்துள்ளது. பூமியின் 2-ம் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்ற செயற்கைக்கோளில் இருந்து நேற்றுமுதல் சிக்னல்கள் ஏதும் வரவில்லை. தகவல்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிசாட்-6ஏ செயறிக்கைக்கோள் ராணுவத்தினருக்கும், மக்களுக்கும் தேவையான தகவல் தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் செலுத்தப்பட்டது. 10 ஆண்டுகள் ஆயுட்காலம் என நிர்ணயிக்கப்பட்டநிலையில், விண்ணில் செலுத்தப்பட்ட 2 நாட்களில் தகவல்தொடர்பை இழந்துள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் வேதனையை ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment