லண்டனில் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு இறுதிச்சடங்கு
லண்டனில் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
லண்டன்,
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த 14-ம் தேதி மரணமடைந்தார்.
ஆக்ஸ்போர்டில் பிறந்தார்
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் கடந்த 1942-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதி பிறந்தவர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். இயற்பியல் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக திகழ்ந்த இவர், நேற்று காலையில் கேம்பிரிட்ஜில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 76.
அதிகமான அறிஞர்கள் நிறைந்த குடும்பத்தில், மருத்துவ ஆராய்ச்சியாளருக்கு மகனாக பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், தனது சிறு வயதிலேயே ஆராய்ச்சித்திறன் பெற்றிருந்தார். ஹெர்ட்போர்ட்சயரில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த ஹாக்கிங், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை பயின்றார்.
நரம்பியல் நோய்
தனது 16-வது வயதிலேயே நண்பர்களுடன் இணைந்து கணித கோட்பாடுகளை தீர்ப்பதற்கான கணினி ஒன்றை உருவாக்கி சாதித்தார். அண்டவியலில் ஆய்வு செய்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், அந்த பல்கலைக்கழகத்திலேயே கணித பேராசிரியராக தனது பணியை தொடங்கினார்.
இவரது 21-வது வயதில் மிகவும் அரிதான ‘அமியோட்ராபிக் லேட்டரல் ஸ்கிலிராசிஸ்’ என்ற நரம்பியல் நோய், ஹாங்கிங்கை தாக்கியது. இதனால் கை, கால்கள் உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததுடன், வாழ்க்கை முழுவதும் சக்கர நாற்காலியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
பேச்சுத்திறன் இழந்தார்
கடந்த 1985-ம் ஆண்டு ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனத்துக்கு ஹாக்கிங் சென்றார். அங்கு அவருக்கு நோய் தொற்று ஏற்படவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலைமை மோசமடைந்ததால், அவரது உயிர் பிரிவதற்காக அந்த கருவிகளை எடுக்க டாக்டர்கள் விரும்பினர்.
ஆனால் இதற்கு மறுத்த ஹாக்கிங்கின் மனைவி ஜேன் வைல்டு, ஹாக்கிங்கை இங்கிலாந்துக்கு கொண்டு வந்து கேம்பிரிட்ஜ் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் ஹாக்கிங்கின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் அவரது குரல் போய்விட்டதுடன், பேசும் திறனையும் இழந்தார் ஹாக்கிங்.
இறப்புக்கு அஞ்சவில்லை
எனினும் தன்னம்பிக்கையை கைவிடாத ஹாக்கிங் நவீன குரல் தொகுப்பு கருவி மூலமும், கண் புருவங்களின் அசைவின் மூலமும் அடுத்தவருடன் தொடர்பு கொண்டார். நரம்பியக்க நோய் காரணமாக 2 ஆண்டுகள் மட்டுமே அவரால் உயிரோடு இருக்க முடியும் என டாக்டர்கள் கணித்தனர். ஆனால் அவர்களது கணிப்பை பொய்யாக்கி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்வாழ்ந்தார் ஹாக்கிங்.
ஒருசில உள்ளுறுப்புகள் தவிர அனைத்தும் முடங்கிப்போன நிலையிலும் தனது விடாமுயற்சியால் ஆய்வுப்பணிகளையும், பேராசிரியர் பணியையும் தொடர்ந்தார்.
தனது நோய் பற்றி அவர் கூறுகையில், ‘இறப்பை எண்ணி நான் அஞ்சவில்லை. ஆனால் சாவுக்கு நான் அவசரப்படவில்லை. அதற்கு முன் நான் செய்வதற்கு நிறைய இருக்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
குவாண்டம் கோட்பாடு
இயற்பியல் துறை ஆய்வில் தீராத காதல் கொண்டிருந்த ஹாக்கிங், சக்கர நாற்காலியில் இருந்தவாறே குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருந்துளைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு பல கட்டுரைகள் எழுதினார். குறிப்பாக அண்டவெளி தோற்றம், அதன் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்து பல கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.
பரந்து விரிந்த விண்வெளி குறித்து மனிதன் அறிந்த மிகக்குறைந்த தகவல்களை ஹாக்கிங் ஆய்வு செய்தார். கருந்துளைகளில் இருந்து துகள்கள் வெளியேறுவதை இவர் கண்டுபிடித்ததால், அந்த துகள்களுக்கு ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ என பெயரிடப்பட்டது. காலத்தின் தொடக்கம் மற்றும் முடிவில் என்ன நடக்கும்? என்பதை தன்னால் கணிக்க முடியும் என்று அறிவித்தார்.
சர்ச்சையில் சிக்கினார்
‘இறைவன் உலகை படைத்தார் என்பதை நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை’ என்று கூறி உலகை அதிர வைத்த ஹாக்கிங், கடவுள் மறுப்பு மற்றும் வேற்று கிரகவாசிகளின் இருப்பு போன்ற கருத்துகளை உறுதியுடன் கூற தயங்கியதில்லை. இதனால் பல்வேறு சர்ச்சைகளிலும் அவர் சிக்கினார்.
தன்னாட்சி ஆயுதங்கள் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவின் மோசமான பயன்பாடுகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்து வந்த ஹாக்கிங், மனித குலம் தொடர்ந்து வாழ வேண்டுமானால் அது விண்வெளியில் பரவியிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
புத்தக விற்பனையில் சாதனை
தனது ஆய்வு முடிவுகள் குறித்து பல புத்தகங்களை அவர் எளிய நடையில் வெளியிட்டு உள்ளார். இதில் ‘ஏ பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்’ மற்றும் ‘தி யுனிவர்சல் இன் ஏ நட்ஷெல்’ போன்ற புத்தகங்கள் அவரது அறிவியலை சாதாரண மக்களும் அறியச்செய்தது. அதுவும் ‘ஏ பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்’ புத்தகம் தொடர்ந்து 237 வாரங்களாக அதிக விற்பனை பட்டியலில் இடம்பெற்று கின்னஸ் சாதனை படைத்தது.
இவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது, வூல்ப் பரிசு, கோப்லே பதக்கம், அடிப்படை இயற்பியல் பரிசு உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். ஆனால் நோபல் பரிசு மட்டும் அவருக்கு வாய்க்கவில்லை.
2 முறை திருமணம்
ஸ்டீபன் ஹாக்கிங் தனது கல்லூரி தோழி ஜேன் வைல்டை 1965-ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தனர். 1991-ல் ஹாக்கிங்-ஜேன் தம்பதி பிரிந்தனர். 4 ஆண்டுகளுக்குப்பின், தனக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்த எலைன் மேசன் என்ற நர்சை ஹாக்கிங் மணந்தார். இந்த திருமணமும் 11 ஆண்டுகளில் முறிந்தது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப்பிறகு மிகச்சிறந்த அறிவாற்றல் கொண்டவராக விளங்கிய ஸ்டீபன் ஹாக்கிங், ஐன்ஸ்டீனின் பிறந்த நாளான மார்ச் 14-ந்தேதியில் மரணமடைந்திருப்பது அறிவியல் உலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
ஸ்டீபன் ஹாக்கிங் இறுதிச்சடங்கு
இந்தநிலையில் லண்டனில் மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் மூத்த மகன் ராபர்ட், முன்னாள் மாணவரான பே டூக்கர் மற்றும் வானியலாளர் மார்ட்டின் ரீஸ் ஆகியோர் இறுதி அஞ்சலி நிகழ்ந்தவின்போது உரையாற்றினார்கள்.
ஹாக்கிங்கின் உடல் தேவாலயத்தை அடைந்தவுடன், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு ஆண்டையும் குறிக்கும் வகையில் 76 முறை மணி ஒலிக்கப்பட்டது.
பிரபஞ்சத்தை குறிக்கும் அல்லி மலர்கள் மற்றும் துருவ நட்சத்திரத்தை குறிக்கும் வெள்ளைநிற ரோஜாக்கள் ஹாக்கிங்கின் சவப்பெட்டியின் மீது வைக்கப்பட்டிருந்தன.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் சவப்பெட்டியை அவரது குடும்பத்தினர் சுமந்து சென்றனர். சவப்பெட்டி மேல்நோக்கி தூக்கப்பட்டதும், அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கரவொலி எழுப்பி அஞ்சலி செலுத்தினர்.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் உடலை அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சியாளராக இருந்த கோன்வில் மற்றும் காயஸ் கல்லூரியிலிருந்து தேவாலயத்திற்கு ஆறு சுமை தூக்குபவர்களால் எடுத்துச்செல்லப்பட்டது.
சர் ஐசக் நியூட்டன் உடல் அருகே ஸ்டீபன் ஹாக்கிங் உடல் அடக்கம்
வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியிலுள்ள அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே ஹாக்கிங்கின் சாம்பல் ஜூன் மாதத்தில் அடக்கம் செய்யப்படும்.
கடந்த 1727ஆம் ஆண்டு இறந்த சர் ஐசக் நியூட்டன் உடலும், அதற்குப் பின்னர் 1882ல் உயிரிழந்த சார்லஸ் டார்வின் உடலும் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment