சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல்..
சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் கே.நந்தகுமார் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதுவரை யில் சிறப்பாசிரியர் நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலே நடைபெற்று வந்தது. தற்போதுதான் முதல்முறையாக போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர் தேர்வை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அட்டவணையின்படி, தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். தேர்வு முடிந்து, உத்தேச விடைகளும் (கீ ஆன்சர்) வெளியிடப்பட்டு, 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை. இதனால் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி சிறப்பாசிரியர் தேர்வெழுதிய சுமார் 200 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த திங்களன்றுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிறப்பாசிரியர் தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமாரிடம் கேட்டபோது, "தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார். எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் பட்சத்தில், `ஒரு காலியிடத்துக்கு 2 பேர்' என்ற விகிதாச்சாரத்தில் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.
No comments:
Post a Comment