அரசு உதவிபெறும், சிறுபான்மை பள்ளிகளில் புதிய நியமனங்களை தடுக்கும் அரசாணையை ஐகோர்ட் மதுரை கிளை நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியை வரன்முறை செய்து, உரிய சம்பளம் மற்றும் பணப்பலன்கள் வழங்கக் கோரி சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, அனைவரும் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தனர். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை சரி செய்யப்படும் வரை புதிய ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளக்கூடாது. மீறி நடக்கும் நியமனங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்க கூடாது என உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், செப்.17ல் பள்ளிகல்வித்துறை சார்பில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், ‘‘1991-92க்கு முன் பள்ளிக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் தற்போதைய மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான பணியிடங்களில் எது குறைவோ அதற்கேற்ப பணியாளர் நிர்ணயம் செய்ய வேண்டும்.
நடுநிலைப்பள்ளியில் உபரி ஆசிரியர் ஏற்பட்டு, கீழ்நிலை வகுப்புகளில் தேவை இருந்தால் அந்த வகுப்பின் பணியாளர் நிர்ணயத்தை கணக்கில் கொள்ள வேண்டும். இதேபோல் கீழ்நிலை வகுப்பு உபரி ஆசிரியர் பணியிடத்திற்கேற்ப அவர், மேல்நிலைப்பள்ளிக்கான கல்வி தகுதியை பெற்றிருந்தால் அவரை மேல்நிலைப்பள்ளியின் பணியாளர் நிர்ணயத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதன் மூலம் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படக்கூடாது. இதன் பொருட்டு புதிய நியமனங்கள் கூடாது. அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை சரி செய்யப்படும் வரை புதிய ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளக் கூடாது. மீறி நடக்கும் நியமனங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது’’ என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன. மனுவை விசாரித்த நீதிபதிகள், புதிய நியமனங்களை தடுக்கும் வகையில் செப்.17ல் வெளியான அரசாணையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும், மனுக்கள் மீதான விசாரணையை செப்.30க்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment