சிவகங்கை மாவட்டம் கோவனூரில் பலநூறு காலத்துக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பாண்டியர் காலத்துக் கல்வெட்டு என்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு தலைமையில் நடந்துள்ளது. ஆய்வின்போது ராஜகுருவுடன், தொல்லியல் ஆய்வாளர்கள் கொல்லங்குடி புலவர் காளி ராசா, விமல் ராஜ் ஆகியோரும் உடனிருந்தனர். இதுகுறித்து ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது:
ஊர் முழுவதும் பழமையான கட்டிடத்தின் கற்கள்
கோவானூரில் உள்ள ஊருணியின் முகப்பு பகுதியில் ஒரு வரத்துக்கால் உள்ளன. இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதைக் கட்ட பயன்பட்ட கற்கள் இடிந்து போன கோயில்களிலிருந்து எடுத்துவரப்பட்டதைப் போல உள்ளது. இதுபோன்ற கற்கள் ஊரின் பல பகுதியில் சிதறிக் கிடப்பதைப் பார்க்கலாம்.
கிபி 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
இந்த ஊருணி பகுதியில் வெவ்வேறு தகவல்களைக் கொண்ட 6 துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவை கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள். அதில் குறிப்பிட்டதை ஆராயும்போது, கிடைத்த கல்வெட்டுகள் ஊரில் திருவகத்தீஸ்வரமுடையார் என்ற சிவன் கோயிலிருந்துள்ளதை அறிய முடிகிறது. அழிந்துபோன சிவன் கோயில் கற்களைப் பயன்படுத்தி இந்த பகுதியில் படித்துறையைக் கட்டியுள்ளனர்.
மதுரையை ஆண்ட மன்னனின் வரிகள்
கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பாடிய பாடல் ஒன்று இங்குள்ள ஓர் கல்வெட்டில் காணப்படுகிறது. அந்த பாடலின் 9 வரிகள் உள்ளதைக் கண்டறிந்துள்ளோம். மேலும் இங்குத் தஞ்சாவூரில் நடந்த வரலாற்று முக்கிய நிகழ்வுகளின் தகவலும் உள்ளது.
இந்த ஊரின் பொட்டலில் சங்ககாலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகள் காணப்படுகின்றன. அங்கு கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அமர்ந்த நிலையில் திருமால் சிற்பம் இருக்கிறது. ஆனால், இந்த ஊர் மக்கள் காளி என வழிபடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து தமிழகத்தில் முன் காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த சான்றுகள், அவர்களின் பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்கள் கிடைத்து வருகிறது.
No comments:
Post a Comment