சென்னை: எழுத படிக்க தெரியாதவர்களையும், எட்டாம் வகுப்பு வரை, &'ஆல் பாஸ்&' செய்யும் திட்டம், வரும் கல்வி ஆண்டில், ரத்து செய்யப்பட உள்ளது. இதற்கான சட்டப்பூர்வ ஆலோசனைகள் துவங்கியுள்ளன.மத்திய அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம், 2009ல், அமலுக்கு வந்தது. இதன்படி, அனைத்து மாணவர்களுக்கும், 14 வயது வரை, கட்டாயமாக இலவச கல்வி வழங்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிபந்தனையை அடுத்து, அனைத்து மாநிலங்களும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களை இடைநிறுத்தம் இன்றி, &'ஆல் பாஸ்&' செய்து வந்தன. இதனால், அனைத்து மாணவர்களும் படிக்காத நிலையிலும், அடுத்தடுத்த வகுப்புக்கு பாஸ் செய்யப்பட்டனர்.எழுத படிக்க தெரியாத மாணவர்களும், எட்டாம் வகுப்பை தாண்டி, ஒன்பதாம் வகுப்பு வரை முன்னேறினர்.
அதேநேரம், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில், தமிழிலோ அல்லது அவரவர் மாநில மொழிகளிலோ வாசிக்க தெரியாமல் திணறினர். இவர்களில் பலர், ஒன்பதாம் வகுப்புக்கு வந்த பின், பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு முன், இடையில் கல்வியை நிறுத்தினர்.இதுகுறித்து, மத்திய அரசு கமிட்டி அமைத்து ஆய்வு செய்ததில், பெரும்பாலான பள்ளிகள் பாடமே நடத்தாமல், மாணவர்களுக்கு தேர்ச்சி மட்டும் அளித்தது தெரியவந்தது. எனவே, கல்வி தரத்தை பாழடிக்கும், ஆல் பாஸ் சட்டத்தை ரத்து செய்ய, மத்திய அரசு மசோதா உருவாக்கியது. அது, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், நேற்று முன்தினம் நிறைவேற்றியுள்ளது.
எனவே, அனைத்து மாநிலங்களிலும், ஆல் பாஸ் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும். இதுகுறித்து, தமிழக பள்ளி கல்வி துறையும் ஆலோசனையை துவங்கியுள்ளது.
இதுகுறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:தற்போதைய நடைமுறைப்படி, ஐந்து ஆண்டுகளில், பத்தாம் வகுப்புக்குள் இடைநிறுத்தம் செய்த மாணவர்கள் எண்ணிக்கை குறித்து, பட்டியல் எடுக்கப்படுகிறது. அதன்பின், இடைநிற்றலுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு, ஆல்பாஸ் வழங்குவதா அல்லது ஐந்தாம் வகுப்புடன் நிறுத்துவதா என, முடிவு எடுக்கப்படும். இந்த விஷயத்தில், மாநில அரசுகள் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment