பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று வேலூர் பஜாரில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வேலூர்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் குளித்துவிட்டு, மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையல் செய்து வழிபடுவார்கள். பொங்கலை முன்னிட்டு வேலூர் நேதாஜி மார்க்கெட் மற்றும் பஜார் பகுதியில் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக பொங்கல் வைத்ததும் கரும்பு மற்றும் மஞ்சள் செடிவைத்து படைப்பார்கள். இதற்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து கரும்புகள் கொண்டுவரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 2 கரும்புகள் ரூ.80-க்கும், 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.400 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. 2 மஞ்சள் செடிகள் ரூ.60-க்கு விற்பனையானது.
அதேபோன்று பொங்கலை முன்னிட்டு காய்கறிகள், பூக்கள், பழங்கள், வாழை இலை ஆகியவையும், மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை அலங்கரிப்பதற்கு தேவையான மணிகள், கயிறுகள் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் வைக்கும் இடத்தில் கோலம் போடுவதற்கான வண்ண வண்ண கோலப்பொடிகளும், மண் பானைகளும் விற்பனை செய்யப்பட்டது. பொங்கலுக்காக வழக்கத்தைவிட கூடுதலாக காய் கறிகள் விற்பனைக்கு வரவழைக்கப்பட்டிருந்தது.
பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு நேற்று காலை முதலே பொதுமக்கள் குடும்பத்துடன் மார்க்கெட், பஜாருக்கு சென்று பொருட்களை வாங்கிச்சென்றனர். இதனால் நேதாஜி மார்க்கெட், மண்டிவீதி போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கூட்டத்தை பயன்படுத்தி குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த மார்க்கெட், மண்டிவீதி மற்றும் பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முன்னதாக போகியை முன்னிட்டு நேற்று அதிகாலையிலேயே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்த தேவையில்லாத பழைய பொருட்களை எரித்தனர்.
No comments:
Post a Comment