பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் மாணவ மாணவிகள் என 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர்.
விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்தது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகின.
இதில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவர்களில் 87.4 சதவீதம் பேரும், மாணவிகளில் 94.6 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் மாணவர்களை விட மாணவிகள் 7.2 சதவீதம் பேர் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த தேர்வு முடிவில் 97.3 சதவீதம் தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 96.4 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் 2வது இடமும் மற்றும் 96.2 சதவீதம் தேர்ச்சியுடன் கோவை 3வது இடமும் பிடித்துள்ளன. 80.21 சதவீதம் தேர்ச்சியுடன் விழுப்புரம் கடைசியிடம் பிடித்துள்ளது.
மொத்தம் 2,054 மேனிலை பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோன்று 2,724 அரசு பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
No comments:
Post a Comment