வேலூர் மாவட்டத்தில் நடந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.250 கோடி பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்,
வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில் மே மாதம் 30 மற்றும் 31-ந்தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.
இதையொட்டி வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஸ்டேட் வங்கியின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய வங்கி தொழிற்சங்க ஊழியர் ஒருங்கிணைப்பாளர் மில்டன் தலைமை தாங்கினார். இதில், வாரா கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக பல வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. போராட்டம் நடப்பது தெரியாமல் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் அகில இந்திய வங்கி தொழிற்சங்க ஊழியர் ஒருங்கிணைப்பாளர் மில்டன் நிருபர்களிடம் கூறுகையில், ‘வேலை நிறுத்த போராட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என, சுமார் 3 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், வேலூர் மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) ஒருநாள் மட்டும் ரூ.250 கோடி பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டம் 2-வது நாளாக நாளையும் (இன்றும்) நடைபெற உள்ளது’ என்றார்.
No comments:
Post a Comment