
ஆம்பூர்,
தேசிய நகர்புற சுகாதார வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி ஏ.கஸ்பாவில் உள்ள சிவராஜ்புரம் பகுதியில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட சில நாட்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் ஆதிதிராவிட இன மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு, பொது உபயோகம் மற்றும் வருங்கால உபயோகத்திற்காக விடப்பட்டுள்ள 10 மனை அளவுள்ள காலி இடம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இடையூறு செய்பவர்கள் மீது நகராட்சி ஆணையாளர் எல்.குமார் போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ஊர் நாட்டாண்மை ரமேஷ், துணை நாட்டாண்மை அன்பு, செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் சரவணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன், தொகுதி செயலாளர் வெங்கடேசன், அம்பேத்கர் மன்ற மாநில பொதுச்செயலாளர் நேய.சுந்தர், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பிச்சை, கருணாநிதி உள்ளிட்டோர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.
அங்கு போலீசார் தாலுகா அலுவலகத்திற்கு செல்லும்படி கூறியதை தொடர்ந்து அவர்கள் ஆம்பூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே தாசில்தார் சாமுண்டீஸ்வரி அவர்களை அழைத்து, அவர்களிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்டு இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment