வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக மோர்தானா அணை உள்ளது. குடியாத்தத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
குடியாத்தம்,
ஆந்திர மாநிலம் புங்கனூர், பலமனேர், நாயக்கனேரி உள்ளிட்ட காட்டு பகுதிகளில் மழை பெய்தால் அதில் இருந்து கவுண்டன்ய மகாநதியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் இந்த அணையில் தேக்கப்படுகிறது.
392 மீட்டர் நீளம் உள்ள இந்த அணையின் முழு உயரம் 23.89 மீட்டர் ஆகும். இதன் நீர்த்தேக்க உயரம் 11.5 மீட்டர் ஆகும். இந்த அணையின் கொள்ளளவு 262 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது அணையில் 11.3 மீட்டர் உயரத்திற்கு 255.378 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில் மோர்தானா அணையில் இருந்து குடிநீர், பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நேற்று மதியம் 12 மணி அளவில் மோர்தானா அணையை அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட கலெக்டர் எஸ்.ஏ.ராமன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன் ஆகியோர் திறந்து வைத்து தண்ணீரில் பூக்கள் மற்றும் நவதானியங்களை தூவி வணங்கினர்.
அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 240 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மொத்தம் 207.360 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த அணையில் இருந்து செல்லும் தண்ணீர் ஜிட்டப்பல்லி தடுப்பணைக்கு சென்றடைகிறது. அங்கிருந்து வலது, இடதுபுற கால்வாய்கள் வழியாக தலா 70 கனஅடி தண்ணீர் செல்கிறது.
கவுண்டன்ய மகாநதி ஆற்றின் வழியாக 100 கனஅடி தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் சீவூர், செதுக்கரை, அம்மணாங்குப்பம், வேப்பூர், பசுமாத்தூர், காவனூர், அக்ராவரம், பெரும்பாடி, எர்த்தாங்கல், நெல்லூர்பேட்டை, தாழையாத்தம், செருவங்கி, செட்டிகுப்பம், மேல்முட்டுக்கூர், மேல்ஆலத்தூர், கூடநகரம், பட்டு, ஒலக்காசி, சித்தாத்தூர் உள்ளிட்ட 30 கிராமங்கள் மற்றும் குடியாத்தம் நகரிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6,534 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியும், குடிநீர் வசதியும் பெறும்.
தண்ணீர் செல்லும் வழிநெடுகிலும் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் உயரும். இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக நடந்த மோர்தானா அணை திறப்பு நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் செல்வராஜ், தாசில்தார் மகாலிங்கம், நீர்வள ஆதார அமைப்பு செயற் பொறியாளர் அன்பரசு, உதவி செயற் பொறியாளர்கள் விஸ்வநாதன், ஆர்.ரவி, உதவி பொறியாளர் கே.ரவி, அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ராமு, நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி, ஒன்றிய செயலாளர்கள் சி.வெங்கடேசன், டி.சிவா, கே.எம்.ஐ.சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரகு, அப்துல்கரீம், கலைச்செல்வி, நகராட்சி பொறியாளர் சங்கர் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment