மே 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களுக்கு
மும்பையில் ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 5ஆம் தேதி நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 2 சதவிகிதம்தான் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என இந்திய வங்கிகள் சங்கம்(ஐபிஏ) தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வங்கி ஊழியர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிராங்கோ செய்தியாளர்களிடம் தெரிவிப்பதாவது:
பணமதிப்பழிப்பின்போது வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இரண்டு மாதம் முழுவதும் இரவு பகல் பாராது உழைத்தனர். 31 கோடி ஜன்-தன் கணக்குகளைத் தொடங்கியதும் அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துபவர்களும் இவர்கள்தான். முத்ரா மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தும்போது, வங்கி ஊழியர்கள் ஓய்வின்றி உழைத்தனர். ஆனால், அவர்களின் சம்பளம் மற்ற துறைகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளைவிடவும் குறைவாக உள்ளது.
வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் சம்பள உயர்வு கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டியது. ஊதிய உயர்வுக்கான கோரிக்கை கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒப்பந்தம் நடக்கவில்லை. மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் 2 சதவீதம்தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்" என்று கூறினார்.
ஒன்பது சங்கங்களின் கூட்டமைப்பான பெடரேஷன் ஆஃப் பேங்க் யூனியன், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 48 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது. நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்களுடன் தனியார் மற்றும் பன்னாட்டு வங்கி ஊழியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஊதிய உயர்வு ஒப்பந்தம் எப்போதும் போல ஏழாவது நிலை வரை உள்ள அதிகாரிகளுக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வங்கிப் பணிகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment