சிப்காட்( ராணிப்பேட்டை),
பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பு பள்ளிகளின் வாகனங்கள் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் ஆய்வு செய்யப்படும். அதன்படி நேற்று ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளின் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வம், ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கொண்ட ஆய்வுக்குழுவினர் பள்ளிக்கூட பஸ்களை ஆய்வு செய்தனர்.
3 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த ஆய்வில் மொத்தம் 68 பள்ளிகளை சேர்ந்த 338 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.
20 வாகனங்கள் நிராகரிப்பு
நேற்று 183 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவசர கால கதவு சரியாக இயங்காதது, பஸ்சில் வைக்கப்பட்டுள்ள தீயணைப்பு கருவிகள் முறையாக பராமரிக்கப்படாதது, குழந்தைகள் ஏறக்கூடிய பஸ் படிக்கட்டுகள் சரியாக இல்லாதது உள்பட பல்வேறு குறைகள் உள்ள 20 வாகனங்கள் தகுதிச்சான்று வழங்காமல் நிராகரிக்கப்பட்டன. இந்த குறைபாடுகளை சரி செய்து மறு ஆய்விற்கு கொண்டு வரும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பினர்.
ஆய்வின்போது ராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் மோகனன், அரக்கோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்பட அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டனர்.
19-ந் தேதி
2-ம் கட்டமாக அரக்கோணம் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 152 பள்ளி வாகனங்கள் வருகிற 19-ந் தேதி அரக்கோணத்திலும், ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட மீதமுள்ள பள்ளி வாகனங்கள் 3-ம் கட்டமாக வருகிற 26-ந் தேதி ராணிப்பேட்டை வாரச்சந்தை பகுதியிலும் நடைபெறும் என ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment