
வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர் சைதாப்பேட்டை கானாறு தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கானாறு தெருவில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையிலும் குடிநீர் வரவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 8 மணியளவில் பி.டி.சி. ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினர்.
அதற்கு போலீசார், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம், போலீசார் செல்போனில் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அந்த பகுதியில் குடிநீர் செல்லும் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை நேரம் என்பதால் அலுவலகம், வேலைக்கு செல்பவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
No comments:
Post a Comment