வேலூர் கோட்டையில் குப்பைகள் கொட்ட குழிகள் தோண்டிய போது 18-ம் நூற்றாண்டை சேர்ந்த பீரங்கி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த இடத்தில் வெடிமருந்துகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
வேலூர்,
ஒரு மன்னர் ஆட்சியின் வலிமையை பிரதிபலிக்கும் விதமாகவும், மக்கள், மன்னர் மற்றும் முக்கிய செயல்பாடுகளை காக்கவும் கட்டப்பட்டவையாக கோட்டைகள் திகழ்கிறது. அவ்வாறு கோட்டைகள் நிறைந்த மாநகரின் மையப்பகுதியில் முக்கிய சுற்றுலா தலமாக அகழியுடன் கூடிய வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை திகழ்கிறது. இக்கோட்டையின் வரலாறு சம்புவராயர் காலக்கட்டத்தில் தொடங்கி, சின்ன பொம்மு நாயக்கர் போன்ற பல்வேறு மன்னர்கள் காலத்தில் மேம்படுத்தப்பட்டு மராட்டியர்கள் ஆட்சி முதல், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சி வரை நீள்கிறது.
வரலாற்று ஆசிரியர்களுக்கு தீனி போடும் விதமாக பல்வேறு புராதான சின்னங்கள் புதைந்துள்ளது. மேலும் கோட்டையினுள் மத்திய, மாநில அரசுகளின் அருங்காட்சியகங்கள், ஜலகண்டேஸ்வரர் கோவில், மசூதி போன்றவை உள்ளது. இவ்வாறு சிறப்பு மிக்க கோட்டைக்கு தினமும் சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர்.
வேலூர் கோட்டையினுள் ஜலகண்டேஸ்வரர் கோவில் இடது புறம் கோ சாலை உள்ளது. இந்த கோசாலையில் கடந்த 22-ந் தேதி குப்பைகள் கொட்டுவதற்காக குழிகள் தோண்டப்பட்டது. அப்போது குழாய் ஒன்று தென்பட்டுள்ளது. இதைப்பார்த்த தொழிலாளர்கள் ஏதோ ஒரு குழாய் உள்ளது என்று மேலும் தோண்டினர். பின்னர் அக்குழாய் நீளமாக இருந்ததால் அவர்கள் சந்தேகம் அடைந்து நிறுத்தி விட்டனர்.
மேலும் இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த குழாய் பீரங்கி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த பீரங்கியின் அருகே வெடி மருந்துகள் இருந்ததால், அதனை அப்படியே விட்டு விட்டோம். மேலும், இதுகுறித்து தொல்லியல்துறை ஆய்வாளர்கள் தான் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் அவை எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்று துல்லியமாக தெரியவரும். எனவே சென்னையில் இருந்து 28-ந் தேதி (திங்கட்கிழமை) தொல்லியல் துறை ஆய்வாளர்கள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், இந்த பீரங்கி 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். இக்கோட்டையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று குழிகள் தோண்டிய போது சில பீரங்கிகள் கிடைத்துள்ளது. அவைகள் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. வேலூர் கோட்டையில் பல்வேறு புராதான சின்னங்கள் புதைந்துள்ளது. கோட்டையினுள் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, புதைந்துள்ள வரலாற்றை வெளிக்கொண்டு வரவேண்டும்’ என்றனர்.
பீரங்கி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் அருகே வெடிமருந்துகளும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment