பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் எதிர்பாராத விபத்துகளினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படுகிறது. விபத்தில் மரணமடைந்த மாணவர்களுக்கு ரூ.1 லட்சம், பலத்த காயம் அடைந்தால் ரூ.50 ஆயிரம், சிறிய காயம் அடைந்த மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
குறிப்பாக மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும்போது ஏற்படும் விபத்து, கல்வி சுற்றுலா செல்லும்போது ஏற்படும் விபத்து, விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும்போது ஏற்படும் விபத்து போன்ற காரணங்களினால் பாதிப்பு அடைந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித்தொகை பெற்று வழங்க கோரி முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து விண்ணப்பங்கள் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆனால் அதில் தகுந்த இணைப்புகள் இல்லாமல் அனுப்பி வைக்கப்படுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே பெற்றோர் அல்லது பாதுகாவலர் விண்ணப்பம், மாணவ மாணவியர் சார்பான விபர படிவம், தலைமை ஆசிரியரின் பரிந்துரை கடிதம், எப்ஐஆர், இறப்பு சான்று, வாரிசு சான்று, மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை நகல், மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை கடிதம், முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரை கடிதம் ஆகியவற்றின் இரண்டு நகல்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று மாவட்ட கல்வி அலுவலகம் வழியாக பெறப்பட்டு முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment